மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘5 பேர் கொண்ட குழுவை மலை உச்சியில் வழிபட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க கோயில் நிர்வாகம் அவகாசம் கேட்டுவிட்டு, மேல்முறையீடு செய்துள்ளது.
நான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வு தோன்றுகிறது,’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து பதிவிட்டுள்ளார். போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஆஜராகாததால் அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இனி அவர்களை சட்டப்படி கையாள்வேன் என நீதிபதி எச்சரித்தார்.
மதுரை மாவட்டம் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு அடிப்படையில் 2025 டிச.,1 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் டிச.,3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். 2025 முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை.
இவ்வாறு உத்தரவிட்டார்.
ராம ரவிக்குமார், ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் செயல் அலுவலராக இருந்த யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,’ என மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர வழக்காக டிச.,3 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
உச்சிப் பிள்ளையார் கோயிலில் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன் என்றார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு டிச.,4ல் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச.,4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,’ என்றார். பிப்.,2 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு நிபந்தனையற்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்’ என பதில் மனு தாக்கல் செய்தனர்
மேல்முறையீடு
மார்ச் 4 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்குச் சென்று 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். மார்ச் 18 ல் போலீஸ் அதிகாரிகள் (கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன்) தகுந்த பதில் அளிக்கா விடில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
அவர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து லோகநாதன், இனிகோ திவ்யன், கோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ஞானசேகரன் மேல்முறையீடு செய்தனர்.இம்மனு நிலைக்கத்தக்கதுதானா என்பதை முடிவு செய்ய நேற்று முன்தினம் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதி ராமன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
அவற்றை ஏற்கனவே நிலுவையிலுள்ள அவமதிப்பு மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து நீதிபதிகள் விசாரித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தனி நீதிபதி டிச.,4ல் பிறப்பித்த உத்தரவிற்கு ஏப்.,8 வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்றனர்.
எதிர்கொள்ள தயார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் சுப்பையா, நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
அரசு தரப்பு: அவமதிப்பு வழக்கிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதிபதி: நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சியில் 15 நிமிடம் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தது குறித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவில் எதுவும் இல்லையே. அங்கு நீங்கள் எத்தகைய நிவாரணம் கோரினீர்கள் என்பது எனக்கு எப்படித் தெரியும்.
மரியாதை அளிப்பதில் உறுதியான நம்பிக்கை
அரசு தரப்பு: இவ் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற பதிவுத்துறையிடம் விளக்கம் கோரலாம்.
நீதிபதி: அது எனது வேலையல்ல. நீங்கள் இங்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையிலேயே நான் செயல்படுவேன். நான் ஏன் பதிவுத்துறையிடம் விளக்கம் கோர வேண்டும். அமர்வு பிறப்பிக்கும் உத்தரவை மதித்து நடப்பதே எனது கடமை. உங்களைப் போலன்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு மரியாதை அளிப்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
அரசு தரப்பு: தடை உத்தரவு ஒட்டுமொத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் பொருந்தும். ஐந்து பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சியில் வழிபாடு நடத்த அனுமதிக்க தடை விதிப்பது குறித்து உத்தரவில் இடம்பெறாதது தொழில்நுட்ப கோளாறால் தவறு நிகழ்ந்திருக்கலாம்.
நீதிபதி: போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் ஏன் ஆஜராகவில்லை. அவர்கள் தங்களைப் பற்றி தாங்களே மிக உயர்வாக எண்ணிக் கொள்கிறார்களா. அவர்களுக்கு எதிராக வாரன்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இனி அவர்களை சட்டப்படி கையாள்வேன். ஆஜராவதிலிருந்து கலெக்டர், கோயில் அறங்காவலர்களுக்கு மட்டுமே விலக்கு அளித்திருந்தேன்.
அரசு தரப்பு: தடை உத்தரவு இருப்பதால் ஆஜராகவில்லை. தேவையெனில் அவர்கள் ஆஜராக அறிவுறுத்துகிறோம். அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது.
3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள்
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மொத்தம் 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தேன். கார்த்திகை மாதம் முடிந்துவிட்டதால், நீதிமன்ற உத்தரவுக்கு அடையாளப்பூர்வமாக மரியாதை செலுத்தும் அதே வேளையில், அதிகாரிகள் தங்களது சட்டப்பூர்வமான தீர்வுகளையும் மேற்கொள்ளலாம் என பரிந்துரைத்தேன்.
இவ்விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அவ்வாய்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில், நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்களுக்கு தீர்வு காண அல்லது சரிசெய்ய தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை. அதற்காக, வழக்கு நடைபெறும் எந்த நிலையிலும் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதனடிப்படையில்தான் ஒரு குறிப்பிட்ட பரிந்துரையை வழங்கியிருந்தேன்.
நிராகரிக்கவில்லை
கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அப்பரிந்துரையை பரிசீலிக்க கால அவகாசம் கோரினார். மதிப்புமிக்க ஒரு மூத்த வழக்கறிஞரிடமிருந்து ஒத்திவைப்பு கோரிக்கை வந்ததால் அது இந்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரையை பரிசீலிப்பதற்காகவே என்பதால், அதை நான் நிராகரிக்கவில்லை.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்பை மீறி, என்னால் இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த 2 வார கால அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டு, அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதித்துறை சார்ந்த நிவாரணங்களை பயன்படுத்திக்கொள்வது எதிர்மனுதாரர்களின் உரிமை. ஆனால் நான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக ஒரு உணர்வு தோன்றுகிறது.
நீதிமன்றத்தில் ஒரு பதிலுடன் மீண்டும் ஆஜராகும் பொருட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது. அக்கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அதற்கிணங்க நீதியுணர்வுடன் செயல்படுவது நியாயமாகும். காதலிலும் போரிலும் மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் கூட அனைத்தும் நியாயமே.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நான் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தேன். ஆனால் போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் இந்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவர்களில் ஒருவர், இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை
டிச.,3 ல் நான் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பிரவீன்குமார், லோகநாதன் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அதை அமர்வு டிச.,4ல் தள்ளுபடி செய்தது. டிச.,3 ல் நான் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பு என்னையே சாரும் என அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
டிச.,3 ல் பிறப்பித்த உத்தரவை மீறியது தொடர்பான அவமதிப்பு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அமர்வு பிறப்பித்த உத்தரவை நான் பின்பற்றாவிடில் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன். டிச.,4 ல் அமர்வு தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.டிச.,4 ல் அமர்வு பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரையிலும், நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கும்.
இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உத்தரவு தொடர்பானது மட்டுமல்ல. எவ்வாறாயினும், இவ்வழக்கு தற்போது இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது. அது ஏப்.,8 வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இவ்வழக்கு விசாரணை ஏப்.,9 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
