மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ரம்ஜான் பண்டிகையின்போது, முஸ்லிம்களை தொழுகை நடத்த அனுமதித்தது தொடர்பாக,

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ரம்ஜான் பண்டிகையின்போது, முஸ்லிம்களை தொழுகை நடத்த அனுமதித்தது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்தது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில், தீபம் ஏற்ற விடாமல் தமிழக அரசு தடுக்கிறது. இதற்காக உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அரசு சட்ட போராட்டம் நடத்துகிறது. தீபத்துாணில் தீபம் ஏற்ற மற்றும் அங்கு வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையின்போது, மலையில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இது, சட்டத்திற்கு புறம்பானது.

மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், தொல்லியல்துறை அலுவலர், சுப்பிர மணியசுவாமி கோவில் இணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில உள்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன், ‘ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊடகங்களில் தன் பெயர் வெளிவர வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற மனுக்களை மனுதாரர் தொடர்ந்து தாக்கல் செய்வதாக தெரிகிறது.

‘மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

Source link