மதுரை: மதுரையில், ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ஒத்தக்கடை யானைமலையில், சிலுவை வழிபாடு நடத்தியவர்கள் குறித்து,

மதுரை: மதுரையில், ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ஒத்தக்கடை யானைமலையில், சிலுவை வழிபாடு நடத்தியவர்கள் குறித்து, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலர் ஹரிஹர புத்திரன், ஒத்தக்கடை போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:கிறிஸ்துவ அமைப்பினர் சிலர், சில நாட்களுக்கு முன், யானைமலை மீது ஏறிச்சென்று சிலுவையை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். பின்னர், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஹிந்துக்கள், யானைமலையை கடவுளாக வணங்கி வருகின்றனர்.சமணர் படுகைகள் கொண்ட இம்மலை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சிலுவையை வைத்து யானை மலையை ஆக்கிரமிப்பு செய்து, இப்பகுதி மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையை தொடர்ந்து, யானைமலையையும் ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக கூறி, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஹிந்து அமைப்பினர் கூறுகையில், ‘ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையை குறிப்பிட்ட மதத்தினர் ஆக்கிரமிக்க முயற்சித்தனர். அதை நீதிமன்றம் வரை சென்று பெரும் போராட்டம் நடத்தி தடுத்தோம். அடுத்ததாக யானைமலையை மற்றொரு மதத்தினர் வழிபாடு என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் நோக்கில் வந்துள்ளனர். ‘இதை தடுக்காவிட்டால் வாரந்தோறும் ஞாயிறு அன்று வழிபாடு நடத்தி, ஆக்கிரமித்து விடுவர். போலீசாரும், தொல்லியல் துறையும் கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.

மதுரை எஸ்.பி., அரவிந்த் கூறுகையில், ”தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இம்மலை பொதுவானது என்றாலும், சிலுவை வழிபாடு செய்தனரா என்பது குறித்து விசாரிக்கிறோம்,” என்றார்.

Source link