மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தில், அரசின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நிர்வாகம்

மதுரை : மதுரை திருப்பரங்குன்றத்தில், அரசின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதை அகற்ற தாக்கலான வழக்கில், ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தேவசகாயம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில், அரசுக்கு சொந்தமான 0.69 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதை, சி.எஸ்.ஐ., மதுரை – ராமநாதபுரம் நிர்வாகம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் அமைத்து வாடகை வசூலிக்கிறது. ஒரு விடுதியையும் கட்டியுள்ளனர்.இவற்றை அகற்ற நடவடிக்கை கோரி, 2025 ஜூலை 18ல் கலெக்டர், திருமங்கலம் ஆர்.டி.ஓ., திருப்பரங்குன்றம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். தாசில்தார், ‘சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நில ஆக்கிரமிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என பதிலளித்தார். கலெக்டர், ‘அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என பதில் அனுப்பினார். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை சி.எஸ்.ஐ., நிர்வாகம் அகற்றவில்லை. ஆக்கிரமித்து அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் மலையேந்திரன் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பை அகற்ற ஆக., 26ல் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், மேற்கொண்ட நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. விசாரணை மார்ச் 18க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.

Source link