மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மதிப்பனூர் விஏஓ காசிராஜன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துபிரியா. இவர் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 செண்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரத்தின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் உட்பிரிவு பட்டாவை 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். ஆனால் பட்டா மாறாமல் இருந்துள்ளது. இதனால் உட்பிரிவு செய்து பட்டா வழங்குமாறு மதிப்பனூர் வி.ஏ.ஓ காசிராஜனை அனுகினார்.
காசிராஜன் பட்டா மாறுதலுக்கு ரூ.6 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முத்துபிரியா மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரையின்படி ரூ.5,500 ரசாயனம் தடவிய பணத்தை விஏஓ அலுவலகத்தில் இருந்த காசி ராஜனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
