மதுரை: தே.ஜ., கூட்டணியில், புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்தி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில், புதிய நீதி கட்சியின் வேட்பாளராக நடிகை குஷ்புவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று அவர் மதுரை வந்தார். உடன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இருந்தார்.
சுந்தர்.சி அளித்த பேட்டி:
இந்தக் களம் எனக்கு ரொம்ப புதுசு. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, இன்று பழனிசாமியால் ஆதரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் கோட்டை மதுரை.
மதுரை மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. மதுரை மத்தி, தி.மு.க.,வின் பலம் வாய்ந்த தொகுதி; அமைச்சர் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார்.
எனவே, போட்டி கடினமாகத்தான் இருக்கும்; போட்டியை பார்த்து ஒதுங்கிப் போக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
