மத்திய அமைச்சர்கள் பிரசாரம்: ஓட்டுகளாக்க பா.ஜ., திட்டம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர உள்ளனர். மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுதும் அனுப்பி, மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.

பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், குடிநீர் இணைப்பு திட்டம், கழிப்பறை திட்டம், சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக, 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது.

ஆனால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தி.மு.க., தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்து வருகிறது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.

இதற்காக, பிரதமர் மோடி இன்று மதுரையில் நடக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், வரும் 7ம் தேதி வேலுாருக்கும், 11ல் திருச்சிக்கும் வருகிறார். அவரை தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர்.

மூன்று மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம், தமிழகம் முழுதும் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து, தங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பர்; பயனாளிகளையும் சந்திப்பர்.

இதனால், மக்கள் மத்தியில் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் நல்ல பெயர் ஏற்பட்டு, அது ஓட்டுகளாக மாறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Source link