மத்திய அரசின் நிதியை பெற கேரள அரசு தயாராக இல்லை; தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு

மூணாறு: “மத்திய அரசு வழங்கும் நிதிகளை பெற கேரள அரசு தயாராக இல்லை,” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

கேரளாவில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கவிருக்கிறது. இங்கு, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் – தனி தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக மூணாறில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தேவிகுளத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகளான பட்டா, ஜாதி சான்றிதழ், மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகள், தொழிலாளர்களுக்கு வீடு, வனவிலங்கு நடமாட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் உதவியுடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மூணாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்கப்படும்.

மூணாறு – கொடைக்கானல், மூணாறு – மறையூர், பழநி, மூணாறு – டாப் ஸ்டேஷன், குரங்கணி ஆகிய ரோடுகளை அகலப்படுத்த, சீரமைக்க வனத்துறை அனுமதி வேண்டும். அத்திட்டங்களை செயல்படுத்துவது நமது நோக்கமாகும். அவற்றை செயல்படுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளால் முடியாது. அவர்கள் ஆட்சியில் இருந்து வெளியே போக ஆரம்பித்து இருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை தடுப்பது அவர்களது கொள்கையாக உள்ளது.

கேரளாவில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கியும், அதனை பெற கம்யூனிஸ்ட் அரசு தயாரில்லை. மத்திய அரசு கேரளாவுக்கு எவ்வித குறையும் வைக்கவில்லை. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 8ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியும் பயன்படுத்தவில்லை. மத்திய அரசு சார்பில் கேரளாவில் 1,68,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதனை பொய்யாக்கி லைப் மிஷன் என பெயர் மாற்றி குளறுபடி செய்து அத்திட்டத்தை தடுத்து வருகின்றனர் .இவ்வாறு அவர் பேசினார்.

Source link