சென்னை: மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை: மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மஹாராஷ்டிரா மாநில முதல்வர் பட்னவிஸ் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பது தான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
