மத்திய ஆயுதப்படையில் உயர் பொறுப்புகள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளே நிர்வகிக்க புதிய சட்டம்

— நமது சிறப்பு நிருபர் -:

மத்திய ஆயுதப்படை உயர் பொறுப்புகளை ஐ.பி.எஸ்., அதிகாரிகளே வகிப்பதை உறுதி செய்யும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை, எஸ்.எஸ்.பி., எனப்படும் சஷஸ்டிர சீமா பால் மற்றும் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

புகைச்சல்

மத்திய ஆயுதப் படை பிரிவுகளில், வீரர்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், உயர் பொறுப்புகளை வகிக்க முடிவதில்லை என்ற அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

ஏனெனில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளே உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே புகைச்சல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், உயர் பொறுப்புகளை ஐ.பி.எஸ்., அதிகாரிகளே வகிப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது.

பார்லி.,யில் இதற்கான வரைவு மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தாக்கல் செய்யவுள்ளார்.

பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் பதவிகளுக்கான கட்டமைப்புகள் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

மத்திய ஆயுதப் படைகளில் கூடுதல் இயக்குநர் ஜெனரல், சிறப்பு இயக்குநர் ஜெனரல் மற்றும் இயக்குநர் ஜெனரல் பதவிகளை 67 சதவீதம் வரை ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கே ஒதுக்க வரைவு மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரத்து

ஐ.ஜி., பதவி எனில், 50 சதவீதம் வரை ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு ஒதுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அதே போல், டி.ஐ.ஜி., பதவிகளுக்கு 20 சதவீதம் வரை ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டத்தில் டி.ஐ.ஜி., பதவி களுக்கு இட ஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன், அனைத்து பதவிகளும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சதவீத அடிப்படையில் நியமனங்கள் கொண்டு வரப்படுவது, களத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

புதிய சட்டம் ஏன்?

கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மத்திய ஆயுதப் படைகளில் ஐ.ஜி., பதவி வரை ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமிப்பதை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. மேலும், ஆயுதப்படை அதிகாரிகள் பதவி உயர்வு வாய்ப்புகள் முடக்கப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. மத்திய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த ஆண்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதை தடுக்கும் வகையில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக மத்திய அரசு சூசகமாக தெரிவித்து இருந்தது. தற்போது, அதன் வெளிப்பாடாகவே, விரைவில் வரைவு மசோதா பார்லி.,யில் தாக்கல் செய்யப்படஉள்ளது. நக்சல் ஒழிப்பு, எல்லை பாதுகாப்பு ஆகிய பணிகளை மாநில அரசுகளுடன் இணைந்தே மத்திய படைகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு மாநில காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு அவசியம். மத்திய – மாநில அரசுகளுக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பாலமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சங்கிலி தொடர் அறுந்தால், செயல்பாட்டு திறன் பாதிக்கும் என மத்திய அரசு கருதுகிறது. அதன் காரணமாகவே ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில், புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு இருப்பதாக முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Source link