டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர், மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், அரேபிய வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை தளங்கள் அமைந்துள்ள இடங்களை ஈரான் தாக்கியது தான்.
எந்த நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்திருக்கின்றன என்பதை இங்கே காணலாம்;
பஹ்ரைன்;
இங்கு அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவு (Fifth Fleet) தலைமையகம் உள்ளது. இதன் பணி, வளைகுடா நாடுகள், செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளை கண்காணிப்பதாகும். பிராந்திய கடல்சார் பாதுகாப்பே இதன் முக்கிய பணியாகும்.
கத்தார்;
கத்தாரின் தலைநகர் தோஹாவில் அல் உபைத் விமான தளம் இருக்கிறது. இதுதான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மிக பெரிய மற்றும் மிக முக்கிய ராணுவ தளமாகும். இந்த தளமானது, ஈரான், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்தியங்களின் வான்வழி நடவடிக்கைகளை கண்காணித்து ஒருங்கிணைக்கிறது.
குவைத்;
குவைத்தில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத்தளத்தின் பெயா கேம்ப் அரிப்ஜான்(Camp Arifjan)/ குவைத்தின் தெற்கு அமைந்துள்ள இந்த தளம் 2003ம் ஆண்டு ஈராக் போருக்கு பின்னர் முக்கிய தளமாக அறியப்படுகிறது. அலி சல் சலேம் விமான தளம் (Ali Al Salem Air Base) ஈராக் எல்லையில் இருந்து 37 கிமீ தொலைவில் இருக்கிறது. குவைத் அரசுக்கு சொந்தமானது என்றாலும் அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பணி ஈராக் மற்றும் சிரியா செல்லும் அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவுவதாகும்.
ஐக்கிய அரபு அமீரகம்;
அபுதாபி அருகே உள்ளது அமெரிக்காவின் அல் தாப்ரா ராணுவ தளம் (Al Dhafra Air Base). அமெரிக்க வான்படையின் முக்கிய தளம். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீதான நடவடிக்கைகளில் இந்த தளம் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
ஈராக்;
ஈராக்கில் அன் அல் ஆசாத் (Ain Al Asad Air Base) மற்றும் எர்பில் (Erbil Air Base) என்ற தளங்கள் இருக்கின்றன. இவை இரண்டும் நேட்டோ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பவை. கடந்த 2020ம் ஆண்டு அன் அல் ஆசாத் தளம் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது.
சவூதி அரேபியா;
ரியாத் அருகே பிரின்ஸ் சுல்தான் (Prince Sultan Air Base) தளம் அமெரிக்காவின் பேட்ரியாட் வகை ஏவுகணைகளை வைத்திருக்கும் ராணுவ தளமாகும்.
ஜோர்டான்;
அம்மான் அருகே உள்ள முவாபாக் அல் சால்டி (,Muwaffag Al Salti Air Base). இதற்கு அஜ்ராக் ராணுவ தளம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
துபாய்;
துபாயில் Jebel Ali Port என்ற தளம், அமெரிக்கா கடற்படையின் பெரிய துறைமுகம் ஆகும். மத்திய கிழக்கு முழுவதும் வான் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது. பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு ஆகியவை இந்த ராணுவ தளத்தின் முக்கிய பணி.
இந்த ராணுவ தளங்களில் கத்தார், குவைத்தில் இருக்கும் அல் சலேம் விமான தளம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்தாப்ரா விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளம் ஆகியவை ஈரானின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபி ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.
