அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டுள்ளது. இந்த போரால் ஏற்பட்டுள்ள உலக சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் கடுமையான விலை உயர்வு போன்ற நிகழ்வுகள் உலக பொருளாதாரத்தைப் பெரிதளவில் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில், இந்த தாக்குதல் சம்பவங்களால் சம்பந்தப்பட்ட நாடுகளில் உயிர் இழப்பும், பொருளாதார பேரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த போரை நிறுத்தும் படி பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தது வருகின்றன.
இதனிடையே, 48 மணி நேரத்திற்குள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்காவிட்டால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் அந்நாட்டின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் (22-03-26) எச்சரிக்கை விடுத்திருந்தார். டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணியாத ஈரான், எதிரி நாட்டு கப்பல்களை ஹார்மோஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், ஈரானின் அணுமின் நிலையங்கள் தாக்கப்பட்டால், அவை மீண்டும் கட்டப்படும் வரை ஹார்மோஸ் நீரிணை முழுவதும் மூடப்படும் என்றும், அமெரிக்காவுக்கு இடமளிக்கும் அண்டை நாடுகளின் மின் நிலையங்களையும் தாக்குவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில், ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைப்பேசி மூலமாக உரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதர் செர்ஜியோ கோர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் பற்றியும், ஹார்மோஸ் நீரிணை மூடியிருப்பது குறித்து இருவரும் உரையாடியதாகக் கூறப்படுகிறது.
