மத்திய பட்ஜெட் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் எந்த கருத்தும் சொல்லாததால், அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை டில்லி பார்லிமென்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். ‘இந்த பட்ஜெட்டில், தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை’ என, முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மறுபக்கம், ‘குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வளர்க்கும் பட்ஜெட்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாராட்டி உள்ளார்.
ஆனால், தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதாக சொல்லும் த.வெ.க., தலைவர் விஜய், இதுவரை எவ்வித கருத்துமே சொல்லவில்லை.
இது தொடர்பாக, அவரது கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட் தான், நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். எனவே, பட்ஜெட் குறித்து தங்களின் நிலைப்பாட்டை, எல்லா கட்சிகளும், அமைப்புகளும் சொல்வது வழக்கம். அதன்படிதான், கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலானதும், ‘தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத பட்ஜெட்’ என, விஜய் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அதேசமயம், பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த முதல்முறை தொழில் முனைவோருக்கான கடன் திட்டத்தை பாராட்டவும் செய்தார். இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் பட்ஜெட், கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
ஆனால், அதுபற்றி எவ்வித கருத்தையும் விஜய் இதுவரை சொல்லவில்லை. இதனால், அடுத்தகட்ட நிர்வாகிகளும் பட்ஜெட் குறித்து பேச முடியவில்லை.
ஏற்கனவே, கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பின், மத்திய அரசை விமர்சனம் செய்வதை விஜய் தவிர்த்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கு ஏற்ப, விஜயின் இந்த மவுனம், கட்சியினரை ரொம்பவே குழப்புகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
