தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இனி முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் முன்பு தீயணைப்பு வீரர்கள் , தீயணைப்பு கருவிகள் மற்றும் அவசர மீட்பு உபகரணங்கள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடரும் தற்கொலை முயற்சிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று கருதும் பொதுமக்கள், இறுதி நம்பிக்கையாக தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவை நாடி வருகின்றனர்.
ஆனால், அண்மைக்காலமாக மனு அளிக்க வரும் சிலர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளும் எழுந்துள்ளன.
பெண்களின் தொடர் தற்கொலை முயற்சி
சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் குடிநீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் வெளியே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தலைமைச் செயலக பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
அதனைத் தொடர்ந்து, இன்று விழுப்புரம்மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் திடீரென தனது சேலையில் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக தீயை அணைக்க காவல்துறையினர் தண்ணீர் தேடி அலைந்த நிலையில், அங்கிருந்த பெண் காவலர்கள் தங்களது கைகளால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் நிரந்தர பாதுகாப்பு
இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்ந்து, தலைமைச் செயலக பாதுகாப்பு உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் முன்பு தீயணைப்பு துறையைச் சேர்ந்த வீரர் ஒருவர் நிரந்தரமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவருடன் கார்பன் டைஆக்சைடு தீயணைப்பான், தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகள், தீயை அணைக்க பயன்படும் ஈரத் துணிகள் உள்ளிட்ட அவசர மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம்
இதனுடன், தலைமைச் செயலகத்திற்குள் வரும் பொதுமக்கள் அனைவரும் இனி முழுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என்றுகாவல்துறையினருக்குவாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DMK இதுனால தான் தோத்துச்சு! இத மாத்துவாங்களா?
மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரியக்கூடிய பொருட்கள் அல்லது ஆபத்தான பொருட்கள் எதுவும் தலைமைச் செயலகத்திற்குள் கொண்டு வரப்படாததை உறுதி செய்ய சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை
மனு அளிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தற்கொலை முயற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, பாதுகாப்பு அமைப்பில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
Source link
