மனைவியிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டேன்- கவுதம் ராம் கார்த்திக்

சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் கவுதம் ராம் கார்த்திக்.

அவரது நடிப்பில் வருகிற 17-ந்தேதி மிஸ்டர் எக்ஸ் படம் திரைக்கு வருகிறது.

மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். அடுத்ததாக கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் ரூட், லெகசி, ப்ளடி பாலிடிக்ஸ் போன்ற படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

இதை தொடர்ந்து கவுதம் ராம் கார்த்திக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

Q

கவுதம் கார்த்திக் திடீரென கவுதம் ராம் கார்த்திக் ஆனது ஏன்?

A

என் பெயர் கவுதம். தாத்தா பெயர் முத்துராமனின் பெயரில் உள்ள ராம். அப்பா பெயர் கார்த்திக் அவ்வளவுதான்.

Q

மிஸ்டர் எக்ஸ் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி?

A

ஒரு விதத்தில் பார்த்தால் அது நெகட்டிவ் கேரக்டர். இன்னொரு விதத்தில் பார்த்தால் பாசிட்டிவ் கேரக்டர். பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது. அவ்வளவுதான் என்னிடம் சொல்ல சொல்லி இருக்கிறார்கள்.

இந்த கதை கேட்கும்போது பாலிவுட் லெவலில் இருந்தது. இதுவரை எந்த படத்திலும் இது போன்று நான் கஷ்டப்பட்டு நடித்ததில்லை. உடல் அளவிலும் சவாலாக இருந்தது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி பகுதிகளில் நடந்தது. படத்தில் சரத்குமார் மற்றும் அனைவருடனும் எனக்கு காட்சிகள் இருந்தது. ஆனால் மஞ்சு வாரியரிடம் மட்டுமில்லை. அது எனக்கு வருத்தம் தான். அவரது ஸ்டைலே தனி. அந்த அளவுக்கு திறமையாக நடிக்கிறார்.

Q

மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிக்கும் போது உங்களுக்கு காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டதே?

A

கழுத்தில் அடிபட்டது இரண்டு வாரத்தில் சரியாகி விட்டது.

Q

ஆக்சன் கதாபாத்திரங்களாகவே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ரொமான்ஸ் படங்களே உங்கள் நடிப்பில் வரவில்லை. உங்களது ரசிகைகள் பலர் அதற்காக வருத்தப்படுவார்களே?

A

நீங்கள் கேட்கும் கேள்வியை நான் மனசுக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆக்சன், காமெடி, விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன். ரொமான்ஸ் படங்கள் செய்ய ஆசை இருக்கிறது, பார்ப்போம்.

Q

ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் தாத்தா முத்துராமனுடன் நடிப்பதற்கு ஏதும் திட்டம் உள்ளதா?

A

தாத்தாவை நான் பார்த்ததில்லை. அப்பா படத்தையே நான் ரீமேக் செய்ததில்லை. ஏதாவது ஒரு தவறு நடந்து விடக்கூடாது. அதனால் அப்படிப்பட்ட திட்டம் இல்லை.

Q

அப்பா நடிப்பில் பிடித்த படம்?

A

உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, கோகுலத்தில் சீதை, சோலைக்குயில் படங்கள் எனக்கு பிடிக்கும். அடிக்கடி பார்ப்பேன்.

Q

மனைவி மஞ்சிமா மோகன் பற்றி?

A

நல்ல வாழ்க்கை பார்ட்னர். எது செய்வது என்றாலும் அவரிடம் கேட்காமல் செய்ய மாட்டேன். அவரிடம் ஆலோசனை கேட்டு விட்டு தான் படத்தை ஒத்துக்கொள்வேன். நல்ல தம்பதிகளாக இருந்து வருகிறோம்.

Q

வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

A

5 நிமிடம் உட்கார்ந்து அழுவேன்.

அதற்கப்புறம் என் மனைவி மற்றும் என்னுடன் உள்ளவர்கள் வந்து ஊக்குவிப்பார்கள். பிறகு வழக்கம்போல் தெம்பாகி விடுவேன்.

Q

உங்களுக்கு பிடித்த பழக்கம்.

A

வண்டியை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்வேன். பாண்டிச்சேரி வரை சென்று விட்டு திரும்ப வருவேன் என்றார்.

Source link