தமிழ்நாட்டில் புதிய அரசு இரண்டு மாதங்கள் கடந்திருந்தாலும், தொடர்ந்து எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் புகார் . குதிரை பேரம் குற்றச்சாட்டு என சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை. அதிமுகவில் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குறித்து தொடர்ச்சியாக அதிமுக புகார்கள் அளித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமமுகவின் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக தகுதி நீக்கம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அமமுக, ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற காமராஜ், தேர்தல் முடிகளுக்கு பின்பாக தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் கட்சி எம்எல்ஏ காமராஜுடன் இணைந்து பேட்டி ஒன்றும் அளித்தார். தனது எம்எல்ஏ பெயரில் போலி கடிதம் ஒன்றை தவெக வழங்கியுள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் கடந்த மே 13 ஆம் தேதி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திடீரென தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். அதோடு விஜய்க்கு ஆதரவாகவும் சட்டமன்றத்தில் பேசிய காமராஜ், இந்த ஐந்தாண்டு ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
அவருடைய இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக காமராஜை அமமுக கட்சியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். தொடர்ந்து தவெக மீது குதிரை பேரம் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். தற்போது வரை இது சம்பந்தமாக கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் மீது தகுதி நீக்கம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை, அமமுக பொருளாளர் கரிகாலன் நேற்றைய தினம் புகார் அளித்துள்ளார். கட்சி தலைமையின் கட்டுப்பாட்டினை மீறி செயல்பட்டதாக கூறி காமராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் காமராஜ் மீது தகுதி நீக்கம் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக அமமுக பொருளாளர் கரிகாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி தலைமையின் உத்தரவுக்கு மாறாக அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் சட்டப்பேரவை தலைவரிடம் அவர் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்திருக்கிறோம்.
காமராஜை கட்சியை விட்டு நீக்கியது என்பது ஒழுங்கு நடவடிக்கை தான். கட்சியை விட்டு நீக்கப்பட்டு இருந்தாலும், எங்கள் சின்னத்தில் தான் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரேயொரு எம்எல்ஏ என்பதால் கட்சி தாவல் வராது என்பதெல்லாம் கிடையாது. சபையில் கட்சி தலைவரின் உத்தரவை மீறி நடக்கும் போது, அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அமமுக பொருளாளர் கரிகாலன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
