மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 2-6, 6-3, 6-4 என அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வென்றார்.
பேயர்ன் முனிக் அபாரம்
மான்செஸ்டர்: இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்த பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான காலிறுதியின் முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), பேயர்ன் முனிக் (ஜெர்மனி) அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி வரும் ஏப். 1ல் (முனிக்) நடக்கவுள்ளது.
எக்ஸ்டிராஸ்
* கேரளாவின் மஞ்சேரியில் நடந்த ‘ஐ-லீக்’ கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா அணி 0-2 என, ஷில்லாங் லஜோங் அணியிடம் தோல்வியடைந்தது. ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் யுனைடெட், டைமண்ட் ஹார்பர் அணிகள் மோதிய போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.
* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், ‘கேலோ இந்தியா’ பழங்குடியினர் விளையாட்டு நடக்கிறது. இதில் கர்நாடகா நீச்சல் வீரர் மணிகண்டா ‘ஹாட்ரிக்’ தங்கத்தை (50 மீ., ‘பட்டர்பிளை’, 100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’, 200 மீ., ‘மெட்லே’) கைப்பற்றினார். சத்தீஸ்கர் நீச்சல் வீராங்கனை அனுஷ்கா பகத், 2 தங்கம் வென்றார்.
* இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், சர்ரே அணிக்காக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சகார் 8 போட்டியில் விளையாட உள்ளார்.
* நாக்பூரில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 6-4, 1-6, 6-3 என ரஷ்யாவின் செனியா லாஸ்குடோவாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜீல் தேசாய் 7-5, 6-3 என ரஷ்யாவின் எகடரினாவை வென்றார்.
* ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினின் பெப் முனோஸ் 42, நியமிக்கப்பட்டார்.
* பெங்களூருவில், மார்ச் 29ல் உலக ’10கே’ ஓட்டத்தின் 18வது சீசன் நடக்கவுள்ளது. இதில், நடப்பு ஆசிய சாம்பியன் இந்தியாவின் குல்வீர் சிங் 27, பங்கேற்கிறார். சமீபத்தில் நியூயார்க் பாதி மாரத்தான் ஓட்டத்தில் (59.42 வினாடி) 3வது இடம் பிடித்திருந்தார்.
