`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி

  • மயிலாடுதுறை தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், செட்டியார், வேளாளர், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம் தொகுதியில் முக்கிய தொழில்.

  • தி.மு.க கூட்டணியில் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ.

  • தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன், ஆர்.அருள்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது, ஜெகவீரபாண்டியன், வக்கீல் இராம.சேயோன் என பலர் ரேஸில் உள்ளனர். இந்த முறையும் தொகுதி காங்கிரஸ்க்கு செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எஸ்.ராஜ்குமார், மாவட்டத் தலைவர் பானுசேகர் இருவரும் சீட்டுக்கு மல்லு கட்டி வருகின்றனர்.

  • தொகுதியை தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜ்குமார் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார், பானு சேகருக்கு செல்வப்பெருந்தகையின் ஆசி இருப்பதால் தெம்பாக வலம் வருகிறார் என்கிறார்கள்.

  • இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மயிலாடுதுறையைக் குறிவைத்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மண்டலச் செயலாளரான நகை கடை அதிபர் ரவிச்சந்திரன் பசைக்கு பஞ்சமில்லாதவர். இவருக்காக கமல்ஹாசன் தொகுதியைக் கேட்கிறாராம்.

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார்
  • அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார், வி.ஜி.கே.செந்தில்நாதன், நாஞ்சில் கார்த்தி, கோமல் அன்பரசன் ஆகியோர் ரேஸில் உள்ளனர்.

  • அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பா.ம.க-வுக்குச் சென்றால் மீண்டும் சித்தமல்லி பழனிசாமி (அன்புமணி அணி) போட்டியிடுவார் என்கிறார்கள்.

  • நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட காசிராமன் இந்த முறையும் வேட்பாளர்.

  • த.வெ.க-வை பொறுத்தவரை செலவுக்கு கட்சியை எதிர்பார்க்காத நபருக்கே சீட்டாம். பசைக்கு குறையில்லாமல் வலம் வரும் மாவட்ட பொருளாளர் நவீன் மற்றும் நகரச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர்.

  • தி.மு.க, அதிமுக நேரடியாக மோதினால் போட்டி பலமாக இருக்கும். கூட்டணி வலுவாக இருப்பது திமுக-விற்கு ப்ளஸ். பாஜக எதிர்ப்பு அதிமுக-விற்கு மைனஸ்.

  • பா.ம.க-வில் நிலவும் பிளவு, சிறுபான்மையினர் வாக்குகள் போன்றவற்றால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது.

பூம்புகார் சட்டமன்ற தொகுதி

  • பூம்புகார் தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், மீனவர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி போன்றவை முக்கிய தொழில்கள். கட்டடத் கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்றனர்.

  • திமுக-வைச் சேர்ந்த நிவேதா முருகன் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வில் நிவேதா எம்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மேலையூர் தேவேந்திரன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் உள்ளனர்.

  • அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜ் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.

  • நாம் தமிழர் கட்சியில் இளைய நகுலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • தவெக-வில் ஒன்றிய செயலாளர் வசந்த் போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகமிருப்பதாக சொல்கிறார்கள். ஒருவேளை தவெக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மாற்றமிருக்கலாம்.

நிவேதா முருகன்- திமுக
  • 2021 தேர்தலில் 3,200 வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவிய பவுன்ராஜ் இம்முறை முன்பே திட்டமிட்டு வியூகம் வகுத்து பிரச்சார வேலையை தொடங்கி விட்டார். கட்சி பாகுபாடின்றி வீடு தவறாமல் ஹாட்பாக்ஸ் கொடுத்திருக்கிறார்.

  • அதிமுக ஆட்சியில் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். சொந்தக் கட்சியினரை அனுசரிக்கவில்லை என்கிற குறை நிவேதா முருகன் மீது நிலவுகிறது. தனக்கு சீட் பெறுவதே நிவேதா முருகனுக்கு போராட்டமாக இருக்கிறது.

  • பண பலம் படைத்த பவுன்ராஜ், நிவேதா முருகன் இருவரும் மோதினால் போட்டி கடுமையாக இருக்கும். நிவேதா முருகன் மீது சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது.

சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதி

  • சீர்காழி தனி தொகுதியில் பட்டியலினத்தவர், வன்னியர், மீனவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி ஆகியவை முக்கியத் தொழில்கள்.

  • முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள தொகுதியாகியிருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த மு.பன்னீர்செல்வம் சிட்டிங் எம்.எல்.ஏ.

  • தி.மு.க-வை பொறுத்தவரை மு.பன்னீர்செல்வம், பஞ்சு.குமார், மலர்விழி திருமாவளவன், வழக்கறிஞர் சிவதாஸ் ஆகியோர் ரேஸில் உள்ளனர்.

பவுன்ராஜ்- அதிமுக
  • அதிமுக-வில் முன்னாள் எம்.எல்.ஏ பாரதி, சந்திரமோகன், சக்தி, பாலாஜி ஆகியோர் சீட்டுக்காக கடுமையாக மெனக்கெடுகின்றனர்.

  • நாம் தமிழர் கட்சியில் சுபாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • தவெக-வில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குட்டி கோபி போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  • கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க முந்துவதற்கான வாய்ப்புள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம்:

  • மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில்,

  • மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி முந்துவதற்கான சூழல் உள்ளது.

  • பூம்புகார் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது.

  • தனி தொகுதியான சீர்காழி சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில், கூட்டணி பலத்துடன் சிறுபான்மையினர் வாக்குகளும் சாதகமாக இருப்பதால் திமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு உள்ளது. !

Source link