மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு; சிதம்பரத்தில் பரபரப்பு!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விமலா (31), மூன்று குழந்தைகளின் தாய். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில், தொற்று மற்றும் தையல் பிரச்சினை ஏற்பட்டதால் மீண்டும் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோசமடைந்ததால் அண்ணாமலை நகர் மற்றும் பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து விமலாவின் உறவினர்கள்  சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குடும்ப கட்டுப்பாடு தையல் பிரிக்காமல் இவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். வீட்டில் தையல் போட்ட இடத்தில் தண்ணீரோ அல்லது வேர்வை பட்டு தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்துள்ளது. பின்னர் மிகவும் முடியாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முடியாத பட்சத்தில் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்  இதில் மருத்துவர்கள் கவனிப்புடன் பார்த்துக் கொண்டனர் என்கின்றனர்.

Source link