தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சாரா மருத்துவ மாணவர்கள்( Non Service doctors) தோராயமாக 1200 பேர் முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் 250 பேர் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் சேர்ந்து படிக்கிறார்கள்.
அவர்களில் அனைத்து பேட்ச் மாணவர்களுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பாண்டு காலகட்டம் இருப்பது போல் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். வெவ்வேறு பேட்ச் மாணவர்களுக்கிடையே பாரபட்சப் போக்கை கடைப்பிடிப்பதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்
2021 மற்றும் 2022 ல் படிப்பில் சேர்ந்த மருத்துவர்களுக்கு அவர்களது பாண்டு காலகட்டத்தை ஓராண்டாக குறைத்து, உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இந்த கட்டாயப் பணி கால கட்டத்தை தேர்வு முடிந்த நாளிலிருந்து கணக்கிட வேண்டும். போதிய பணியிடங்கள் இல்லாத காரணத்தால் இனி வரும் காலங்களில் அனைத்து அரசு சாரா முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களின்(Non Service & SS bond doctors ) பாண்ட் கட்டாயப் பணியை(Bond Posting) ஓராண்டாகக் குறைத்து, மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் (admission Prospectus) வெளியிட வேண்டும். மேலும் முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவர்களுக்கான பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகப்பேறு விடுப்பை சேவையாக கருத வேண்டும்
கட்டாயப் பணியில் (bond Posting) உள்ள பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்பை சேவையாக கருத வேண்டும். சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களின் கருத்துரிமையை பறிக்கின்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ பல்கலைக் கழகங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். கட்டணக் கொள்ளையும், ஸ்ட்ரே கவுன்சிலிங்கும் , கட் ஆஃப் மதிப்பெண்ணை இறுதி நேரத்தில் குறைப்பதும் முறைகேடான மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்குகிறது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இவற்றை தடுத்திட மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் -2019 (NMC act 2019 ) ல் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு தான், பெண்களுக்கு அதிக நாட்கள் ( ஓராண்டு) மகப்பேறு விடுப்பு வழங்குகிறது. அண்மையில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
