மருத்துவ உலகம் இன்று விசித்திரமான ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறது. அது கிருமிகளால் உருவாவதல்ல, நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களால் உருவாவது. அதன் பெயர் ‘IDIOT Syndrome’ அதாவது Internet Derived Information Obstructing Treatment சிண்ட்ரோம். ஒரு நோயாளி தனக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை மருத்துவர் சொல்வதற்கு முன்பே இணையத்தில் தேடி முடிவெடுப்பதுதான் இந்த ஆரோக்கியச் சிக்கலின் தொடக்கம்.
இது மருத்துவர்களுக்கு எப்படிப்பட்ட அழுத்தத்தைக் கொடுக்கிறது, மக்கள் இந்த சிண்ட்ரோமிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியம் என்ன… எல்லாவற்றையும் விளக்கமாகப் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
படித்தவர்களே செய்கிற தவறு!
”இன்று படித்தவர்கள் கூடச் செய்யும் மிகப்பெரிய தவறு, சிறு அறிகுறி தென்பட்டாலும் கூகுளில் தேடுவதுதான். சாதாரண இருமல், சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் போன்ற அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, அதற்கான காரணங்களை இணையத்தில் தேடும்போது, அது பெரும்பாலும் புற்றுநோய் (Cancer) என்றே காட்டும். புற்றுநோய் என்பது வெறும் ஓர் அறிகுறியை வைத்து முடிவெடுக்கப்படுவதல்ல. உடல் எடை அதீதமாகக் குறைதல், பசியின்மை போன்ற பல காரணிகளை மருத்துவர்கள் ஆராய்வார்கள். பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மட்டுமே ஒரு நோயாளியின் உடலமைப்பு மற்றும் மருத்துவப் பின்னணியை வைத்துத் துல்லியமாகக் கணிக்க முடியும். இணையத்திற்கு உங்கள் முகம் தெரியாது, உங்கள் மருத்துவ வரலாறு தெரியாது.

இன்னொரு பக்கம், மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை வாங்கியவுடன், அவற்றின் பயன்களைவிட பக்கவிளைவுகளை (Side Effects) இணையத்தில் தேடுபவர்களே அதிகம். ஒவ்வொரு மருந்திற்கும் சில பக்கவிளைவுகள் இருக்கலாம், ஆனால், அந்த மருந்து, உங்கள் நோய்க்கு எவ்வளவு அவசியம் என்பதை மருத்துவர் மட்டுமே அறிவார். கூகுள் சொல்லும் தகவல்களைப் பார்த்துவிட்டு மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்துவது நோயின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கி, உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
தேவையற்ற டெஸ்ட்டுகள் வேண்டாமே…!
இன்றைய வணிகமயமான மருத்துவச் சூழலில், கார்ப்பரேட் ஆய்வகங்களின் முடிவுகள் சில நேரங்களில் நோயாளிகளைத் தேவையற்ற பதற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் ஆய்வகப் பரிசோதனைகளின் டெஸ்ட் ரிப்போர்ட்டில் மிகச்சிறிய மாற்றம் இருந்தால்கூட அதைச் சிவப்புக் குறியீட்டில் குறிப்பிட்டு, மக்களை பீதி அடையச் செய்வது நடக்கிறது. மருத்துவர் சொல்லாமலேயே, கூகுளில் தேடி, தாங்களாகவே தேவையற்ற டெஸ்ட்டுகளைச் செய்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். 35 வயது நபர் ஒருவர், தனக்கிருந்த அறிகுறிகளை கூகுளில் செக் செய்து, அது சொன்னபடி PSA (Prostate Specific Antigen) பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். அந்த டெஸ்ட்டில் PSA அளவு சற்று அதிகமாக இருந்ததை மீண்டும் இணையத்தில் பார்த்துவிட்டு, தனக்குப் புற்றுநோய் என முடிவே செய்துவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாகப் பல மருத்துவர்களை மாற்றியும், ஆயிரக்கணக்கான யூடியூப் வீடியோக்களைப் பார்த்தும் நிம்மதி இழந்து தவித்தார். உண்மையில் அவருக்குப் புற்றுநோயே இல்லை. இன்டர்நெட் சொன்ன தவறான தகவல்களை நம்பி, அவர் தனது வாழ்நாளில் பாதியை பயத்திலேயே கழித்தார். இவரைப் போல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்…” என்கிற டாக்டர் அருணாசலம், மக்களுக்கு அறிவுரைகள் சொல்லி முடிக்கிறார்.

மருத்துவரை நம்புங்கள்!
”மருந்து என்பது வெறும் ரசாயனம் அல்ல, அது மருத்துவர் மீதான நம்பிக்கையும் கூட என்பதை முதலில் நம்புங்கள். உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவரைத் தேர்ந்தெடுங்கள்.
மருத்துவரைத் தேர்ந்தெடுத்த பின், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து சிகிச்சையைத் தொடங்குங்கள். மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையும் செய்யாதீர்கள்.
உங்களுக்கு மருந்து குறித்து சந்தேகம் இருந்தால் இணையத்திடம் கேட்காதீர்கள், உங்கள் மருத்துவரிடமே நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். இணையம் உங்களுக்குத் தகவல்களைத் தரலாம்… ஆனால், அது ஒருபோதும் சிகிச்சை ஆகாது. சரியான நேரத்தில் சரியான மருத்துவ ஆலோசனை பெறுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு அஸ்திவாரம்” என்கிறார் டாக்டர் அருணாசலம்.
