மறுபடியும் ரூ.8 லட்சம் கோடி போச்சு அதிகரிக்கும் கரடியின் ஆதிக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ‘சென்செக்ஸ் மற்றும் நிப்டி’ ஆகிய இரண்டு குறியீடுகளும் 2 சதவீதத்துக்கு மேல் சரிவை சந்தித்தன. வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ், 1,690 புள்ளிகள் சரிந்து 73,583 என்ற நிலையிலும், நிப்டி 486 புள்ளிகள் சரிந்து 22,819 என்ற நிலையிலும் வர்த்தகமாகின.

இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 8.42 லட்சம் கோடி கரைந்து போனது. கடந்த புதன்கிழமை வர்த்தக முடிவில் 430.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, நேற்று வர்த்தக முடிவில் 422.11 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

முக்கிய காரணங்கள்  கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு வர்த்தக தினங்களில் 3.5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்த சந்தையை பயன்படுத்தி, நேற்று முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தது

 ‘ஹெச்.டி.எப்.சி.,’ வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தியின் திடீர் ராஜினாமா குறித்து செபி விசாரணையை துவங்கியுள்ளதால், பங்கின் விலை நேற்று 3.10 சதவீதம் சரிந்தது

 சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ இந்தியாவின் 2026 வளர்ச்சி கணிப்பை 7 சதவீதத்திலிருந்து 5.90 சதவீதமாக குறைத்ததோடு, இந்திய பங்குகளை ‘ஓவர் வெயிட்’ நிலையிலிருந்து ‘மார்க்கெட் வெயிட்’ நிலைக்கு தரம் குறைத்தது

 “ஈரான் மீதான தாக்குதலை ஏப்., மாதம் வரை தள்ளி வைக்கிறேன்,” என டிரம்ப் சொன்னாலும், ‘அமெரிக்காவின் திட்டங்கள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அநீதியானவை’ என ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியது, சந்தையில் மீண்டும் பதற்றத்தை அதிகப்படுத்தியது

 ரூபாயின் மதிப்பு தடாலடியாகச் சரிந்து 94.85 என்ற நிலையை எட்டியது

 போர் நிற்காது என்ற பயத்தால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, பேரல் ஒன்றுக்கு 110.92 டாலர் என்ற நிலையை எட்டியது; இதனால் எரிசக்தி வினியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது

 இந்திய பங்குச் சந்தை உயர்ந்தாலும், அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று பணத்தை வெளியே எடுத்து வருவது.

பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்? போர் விரைவில் முடிந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தற்போதைய சிக்கலில் இருந்து மீள முடியும். ஒருவேளை போர் மாதக் கணக்கில் நீடித்தால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து, ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து, பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். ஆர்.பி.ஐ., அவ்வப்போது டாலர்களை விற்று ரூபாயின் மதிப்பை பாதுகாக்க முயற்சித்தாலும், உலகளாவிய சூழல் மற்றும் டாலரின் வலுவான நிலை காரணமாக ரூபாயின் சரிவை தடுப்பது சற்று சவாலாகத்தான் உள்ளது.
வி.கே. விஜயகுமார்
முதலீட்டு பிரிவு முதன்மை ஆலோசகர்
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

Source link