கோலாலம்பூர்: ”நம் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில், மலேஷியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும். இது வெறும் கட்டடமாக இல்லாமல், மொழி, இலக்கியம் மற்றும் இரு நாடுகளின் கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும் பாலமாக செயல்படும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பை ஏற்று, இரு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று அந்நாட்டிற்கு சென்றார். அவருக்கு, கோலாலம்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்ற மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், அவருடன் ஒன்றாக காரில் பயணித்தார்.
ஒப்பந்தங்கள்
இதைத் தொடர்ந்து கோலாலம்பூரில், மலேஷிய வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் வலுவான நாணயமாக நம்பிக்கை உருவெடுத்து இருக்கிறது. பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
இதனால், உலக அளவில் இந்தியா மீதான நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டின், முதல் வெளிநாட்டு பயணமாக மலேஷியா வந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மலேஷியாவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் தடம் பதித்து விட்டனர்.
இந்த வரலாற்றை உந்துதலாக கொண்டு மலேஷியா பல்கலையில் ஏற்கனவே திருவள்ளுவர் இருக்கை அமைத்தோம். தற்போது நம் பாரம்பரியத்தை மேலும் வலுவாக்கும் வகையில் திருவள்ளுவர் மையத்தை அமைக்கப் போகிறோம். இது வெறும் கட்டடமாக செயல்படாது. இரு நாடுகளின் இலக்கியம், மொழி மற்றும் கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும் மையமாக திகழும்.
மைல்கல்
மலேஷியாவின் வளர்ச்சிக்கு இங்குள்ள இந்தியர்கள் முதுகெலும்பாக இருக்கின்றனர். வேர்கள் இந்தியாவில் இருந்தாலும், மலேஷியாவுக்காக வியர்வை சிந்தி பாடுபடுகின்றனர். இதனால், இரு நாட்டுக்கும் இடையே மலேஷிய வாழ் இந்தியர்களும், தமிழர்களும் பாலமாக செயல்படுகின்றனர்.
இந்திய வம்சாவளி சமூகத்தை அதிக அளவில் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக மலேஷியா திகழ்கிறது. இதனால், இந்தியாவுக்கும் மலேஷியாவுக்குமான தொடர்பு உளபூர்வமானது.
கடந்த மாதம் நடந்த, ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியின் போது, மலேஷியாவில் உள்ள, 500 பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இந்திய மொழிகள் கற்று தரப்படுவதை சுட்டிக் காட்டி இருந்தேன். 140 கோடி இந்திய மக்கள் சார்பில் அந்த பெருமிதத்தை பகிர்ந்து கொண்டேன்.
இந்தியாவின் வெற்றி; மலேஷியாவின் வெற்றியாகும். அது ஆசிய கண்டத்தின் வெற்றியாக போற்றப்படும்.
மலேஷியாவில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும், தங்களது மலேஷியா நண்பர்களை நம் நாட்டிற்கு அழைத்து வரவேண்டும். இரு நாட்டு நட்புறவில் அது மைல்கல்லாக மாறும்.
தமிழ் கலாசாரம் தமிழ் இலக்கியமும், கலாசாரமும் என்றும் அழியாதது. தமிழ் கலாசாரம் உலகம் முழுதும் நிரம்பி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணம் மூலம் இந்தியா – மலேஷியா இடையே வர்த்தகம், ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளில் விரிவான கூட்டுறவு மலர உள்ளது.
சாதனை படைத்த
நடன கலைஞர்கள்
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மலேஷிய வாழ் இந்தியர்கள் சார்பில் கலாசார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பரதநாட்டியம், கதக், கதகளி, குச்சிப்புடி, லாவனி மற்றும் ஒடிசி என நம் நாட்டின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இதில் 800 நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடி அசத்தினர். இந்திய நடன நிகழ்ச்சிக்காக, அதிக நடன கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்ற மலேஷிய சாதனை புத்தகத்திலும் இது இடம் பிடித்துள்ளது.
