மலேஷியாவில் பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

கோலாலம்பூர்: 2 நாள் பயணமாக மலேஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி மலேஷியா நாட்டுக்கு சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வந்து பிரதமரை கட்டியணைத்து வரவேற்றார். அந்நாட்டின் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனை இரு நாட்டு பிரதமர்களும் உற்சாகத்துடன் பார்வையிட்டு, கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மலேஷிய பயணத்தின் போது, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கியத்துறைகள் குறித்து இருதரப்பும் பேச்சு நடத்துகின்றனர். தொடர்ந்து, மலேஷியாவில் வாழும் இந்திய சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெறும், 10வது இந்தியா – மலேஷியா தலைமைச் செயல் அதிகாரிகள் சந்திப்பில் இருநாட்டு தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் இந்தப் பயணம் ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

நெகிழ்ச்சி

மலேஷியா பயணம் குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ்தளப் பதிவில்; கோலாலம்பூர் வந்தடைந்து விட்டேன். விமான நிலையத்தில் எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்து போனேன். எங்களின் பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா மற்றும் மலேஷியா இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link