திருவனந்தபுரம்: கேரளாவில், அதிகாரப்பூர்வ மாநில மொழியாக மலையாளம் மட்டுமே இருக்கும் என்பதற்கான மசோதாவில் அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கையெழுத்திட்டுள்ளார்.
கேரளாவில், அதிகாரப்பூர்வ மொழியாக மலையாளம் இருப்பது தொடர்பான மசோதாவை மாநில அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. கேரளாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை மலையாளத்தை முதல் மொழியாக இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. இதற்கு அண்டை மாநிலமான கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது.
கேரளாவை ஒட்டி தமிழகம் இருக்கும் நிலையில், தமிழ் மாணவர்களும் இதனால் பாதிக்கப்படுவர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ‘இந்த மசோதாவில் மொழியியல் சிறுபான்மையினரின், குறிப்பாக கன்னடம் மற்றும் தமிழ் பேசும் சமூகங்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. இதனால், பிறமொழி பேசுபவர்கள் அச்சப்பட வேண்டாம்’ என, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘மலையாள மொழி மசோதா, 2025’க்கு மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டதாக கேரள லோக்பவன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
