வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னங்கள்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மற்றுமொரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த புயல் சின்னங்களின் காரணமாக, தமிழ்நாட்டில் அக்டோபர் 26 வரை பரவலாக கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
6 முதல் 10 செ.மீ மழைநீரை வடியச் செய்யம் Micro Drains
சென்னை மாநகரில் அமைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சிறிய அளவிலான வடிகால்கள் (micro drains) என்பதால், ஒரு மணி நேரத்திற்கு 6.4 செ.மீ முதல் 10 செ.மீ வரை மட்டுமே நீரைக் உள்வாங்கும் திறன் கொண்டது என்றும், அதைவிடக் கூடுதலாக மழை பெய்யும்போது நீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் வடிநிலப் பகுதிகளான வட சென்னையில் பாரிமுனை, பிரகாசம் சாலை உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவிலான மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அக்.17ம் தேதி 36 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் மழை நீர் தேங்கி நின்று, மழை நின்றதும் நீர் முழுமையாக வடிந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறினார்.
பள்ளிக்கரணை வடிநிலப்பகுதி எல்&டி நிறுவனம் மூலம் மேம்பாடு
தென் சென்னையில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி, சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி நீர் வெளியேறி பள்ளக்கரணை வடிநிலைப்பகுதிகளை சென்றடைய பல்லாவரம் – ஓஎம்ஆர் ரேடியல் சாலைக்கு அடியில் சுமார் 50 மீட்டர் அளவில் ராட்சத வடிகால்களை கடந்த திமுக ஆட்சியில் எல்&டி நிறுவனம் மூலம் பணிகளை செய்து முடித்தனர். இதனால் மழையால் ஏரி நிரம்பி சாலையில் வழிந்தோடுவதை தடுத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மழைநீரை தேக்கி வைக்க முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
1000 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பு
கடந்த ஐந்தாண்டுகளில் 1,000 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்ததாக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருதெரிவித்தார். மீதமுள்ள பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மட்டும் 600 கிலோமீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
37 நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து, வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
சென்னையில் பல்வேறு மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் கட்டமைக்கப்பட்டும் சில இடங்களில் மழைநீர் தேங்குகிறது. உடனுக்குடன் மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதே சென்னை வாசிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
