மும்பை: மஹாராஷ்டிராவில், அமைச்சர் ஏற்பாடு செய்த கூட்டத்தை புறக்கணித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
குறுஞ்செய்தி
இங்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே.
கடந்த 26ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின் போது, மஹாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு குறித்து விளக்கமளிக்கும்படி அமைச்சர் பங்கஜா முண்டேவிடம் கூறப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது:
சந்திராபூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு குறித்து என்னால் விரிவாக பதிலளிக்க முடியாது. ஏனென்றால், இது தொடர்பாக ஏற்கனவே நான் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினேன்.
இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மஹாராஷ்டிரா மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலருமான தேவேந்தர் சிங் மற்றும் வாரிய இணை இயக்குநர் சதீஷ் பட்வால் ஆகியோர் பங்கேற்கவில்லை.
பலமுறை அனுப்பப்பட்ட நினைவூட்டலையும் மீறி, இரு அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி, ‘என்னால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது’ என, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவேந்தர் சிங், குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்.
அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால், அமைச்சர்களால் பொதுமக்கள் பிரச்னைக்கு பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, இது குறித்து கருத்து தெரிவித்த சட்டசபை தற்காலிக சபாநாயகர் திலீப் லாண்டே, ‘ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவேந்தர் சிங்கின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இது போன்ற அலட்சிய செயல்களால் மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயரே ஏற்படுகிறது. அமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது’ என்றார்.
பரபரப்பு
சபாநாயகரின் உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தேவேந்தர் சிங் மீது துறை ரீதியான விசாரணை துவங்கியது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மும்பையை தலைமையிடமாக வைத்து அவரது அலுவலகம் செயல் படுவதால், வேறு எந்த ஊருக்கும் அரசின் அனுமதியின்றி செல்ல தேவேந்தர் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் பங்கஜா முண்டே மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவேந்தர் சிங் இருவருக்கும் இடையிலான மோதல் ம ஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
