மஹா.,வில் 'டிஜிட்டல்' கைது மோசடி: மூதாட்டியிடம் ரூ.73.3 லட்சம் பறிப்பு

தானே: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் டிஜிட்டல் கைது செய்வதாகக் கூறி, மஹாராஷ்டிராவை சேர்ந்த மூதாட்டியிடம் 73.3 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

மஹா ராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி சிலர் மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது மூதாட்டிக்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை தருமாறு கேட்டுள்ளனர்.

இதை உண்மை என நம்பி கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலத்தில் 73.3 லட்சம் ரூபாயை பல தவணைகளாக ஆன்லைன் மூலம், அவர்கள் அளித்த பல்வேறு வங்கிக் கணக்குகளில் அந்த மூதாட்டி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மூதாட்டி, மஹாத்மா பூலே சவுக் போலீசில் கடந்த 10ம் தேதி புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஐந்து உள்ளூர் மொபைல் போன்களை பயன்படுத்தி பண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Source link