'மாஜி' கலெக்டருக்கு ஓட்டு: எஸ்.ஐ.ஆர்., பணியில் கூத்து

கோவை: கோவையில் இருந்து ஓராண்டுக்கு முன் மாறுதலாகி சென்ற, முன்னாள் கலெக்டரின் பெயர், இன்னும் கோவை தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ரேஸ்கோர்ஸில், கலெக்டர் பங்களாவுக்கு பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. பழுதடைந்த அந்த குடியிருப்பு இடிக்கப்பட்டது.

அவர்கள், கவுண்டம்பாளையம் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் ஓட்டு, கவுண்டம்பாளையம் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

அதேசமயம், தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருக்கிறது. முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார், 2023 — 2025 வரை, கோவையில் பணிபுரிந்தார். கலெக்டர் வீட்டு முகவரியில், அவரது பெயர் இன்னமும் இருக்கிறது.

கிராந்திகுமார் மாறுதலாகி சென்று ஓராண்டாகி விட்டது. அதுமட்டுமின்றி, சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்த அவர், தற்போது முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக உள்ளார்.

தமிழகத்தில் இருந்தே அவர் சென்று விட்ட நிலையிலும், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் உள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் வீட்டு முகவரியில், முன்னாள் கலெக்டரின் பெயர் இன்னமும் இடம் பெற்றிருப்பது கூட தெரியாமல், என்ன லட்சணத்தில் எஸ்.ஐ.ஆர்., வேலை நடந்தது என, அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source link