மாணவர்கள் போராட்டம் அரசின் தோல்வி.. நாங்கள் தயாராக இருக்கிறோம்: இயக்குனர் வெற்றிமாறன் உறுதி – director vetrimaaran speech at a protest against the neet exam

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவை சார்ந்த பிரபலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ள நிலையில், இந்நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் துவங்கிய நிலையில், பல மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இளைஞர்கள், மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இயக்குனர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், அருண் மாதேஸ்வரன், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு மற்றும் நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர்கள் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். அதன் காரணமாகவே மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துள்ளார்கள்.

மாணவர் போராட்டம் என்பது அரசுடைய தோல்வி. காக்ரோச் ஜனதா தளத்தின் போராட்டம் ஒன்றிய அரசுடைய தோல்வி. அவர்களுடைய போராட்டம் நீட் ஒழிப்புக்கானதாக மாறனும். அதில் உள்ள முறைகேடுகளை சரி செய்ய கூறாமல், நீட் தேர்வினை ரத்து செய்யும் போராட்டமாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார் அதற்கான முன்னெடுப்புகளை நம்ம செய்ய வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், நீட் தேர்வுடைய அழுத்தம் என்ன என்பதை கண் கூடாக பார்க்கிறேன். என்னுடைய நண்பரின் பசங்கள் இதனை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

ஒரு பையன் 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், போன வருடம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவிலை. இப்போ இந்த வருஷமும் எழுதி இருக்கிறேன். அவன் நல்லா படிக்காத பையனா என்று கேட்டால் இல்லை. அவர் நல்லா புரிஞ்சு படிக்கக்கூடிய பையன் என்று தனது நண்பரின் மகன் குறித்து பேசினார். தொடர்ந்து நீட் என்பது நம்மிடம் இருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், அந்த அறிவை முழுமையாக எடுப்பதற்குமான செயல்பாடாகவே உள்ளது.

நம்மை அவர்களுடைய முன்னிலையில் கை கட்டி நிற்க கூடிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தக்கூடிய செயலாகவே உள்ளது. நீட் தேர்வு ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த நீட் தேர்வுக்கு எதிரான செயற்பாட்டார்களுடன் கூட நிற்பதற்கு நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறினார். தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களில் நான் பங்கேற்பேன் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனுடைய இந்த பேச்சு தற்போது பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதே போல் இயக்குனர் அமீர் பேசுகையில், “ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடும்போது, ஜனநாயகன் படத்தை காப்பாற்ற ஒரு கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link