சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின், 48வது கூட்டம், நேற்று டில்லியில், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்தது.
இதில், தமிழக நீர் வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், ‘மேட்டூர் அணையின் நீர் இருப்பு, தற்போது, 53.44 டி.எம்.சி.,யாக உள்ளது; அணையில் இருந்து விநாடிக்கு, 2,503 கன அடி தண்ணீர், குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகா அணைகளின் நீர் இருப்பை கருத்தில் வைத்து, தமிழகத்திற்கு இம்மாதம் முதல், மே வரை வழங்க வேண்டிய, நீர் அளவான, 10 டி.எம்.சி., நீரை, மாதத்திற்கு தலா, 2.50 டி.எம்.சி., வீதம், உச்ச நீதிமன்ற ஆணையின் படி, கர்நாடக மாநிலம், பில்லிகுண்டுலுவில் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும்’ என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
