பனை, தென்னை மரங்களில் கள் இறக்க அனுமதி வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் ஆங்காங்கே மறைமுகமாக கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடு கிராமம் வாணியத்தெரு செல்லும் வழியில் உள்ள ஒரு தோப்பில் சில நாட்களாக கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை அறிந்து கள் பிரியர்கள் பலர் அங்கு சென்று கள் குடித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அங்கு கள் குடித்த பலருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல நெடுவாசல் மேற்கு அரண்மனைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சக்திவேல் (41) நண்பர்களோடு சென்று ஒரு லிட்டர் கள் வாங்கி வந்து தன் வீட்டில் மனைவி மற்றும் 10, 11 வயது மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். கள் குடித்த சிறிது நேரத்திலேயே இவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் புளிச்சங்காடு கைகாட்டியில் ஒரு தனியார் கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரூகின்றனர்.
இதில் இவர்களுக்கு உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பரிசோதனைகள் நடந்து வருகிறது. இதே போல மேலும் பலரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது, தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள் இது போல பாதிப்பு வராது. ஆனால் குறைந்த அளவு கள்ளில் போதைக்கான மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்படுவதால், இது போன்ற உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் பலர் பாதிக்கப்படலாம். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதற்குள் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர்.
