சென்னை: ”கூட்டணி கட்சிகளுக்குள் தனக்கான அடிமைகளையும், விசுவாசிகளையும் தி.மு.க., உருவாக்குகிறது,” என, த.வெ.க., தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழிக்கு எம்.எல்.ஏ., ‘சீட்’ கொடுத்தால், வருங்காலத்தில் கட்சியின் தலைவராகி விடுவார் என, தன் மகன் உதயநிதிக்காக இப்போதே கனிமொழியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி விட்டார்.
காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொண்ட தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தொண்டர்களின் அழுத்தத்தால், தேர்தல் முடிந்ததும் ராஜினாமா செய்வதாக சொல்கிறார்.
தி.மு.க.,வின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, எதற்காக ம.தி.மு.க.,வை வைகோ துவக்கினார்? கடந்த லோக்சபா தேர்தலில் தனி சின்னத்தில் நின்று, அவரது மகன் துரை வென்ற நிலையில், தற்போது தனி சின்னத்தில் போட்டியிட முடியாதா?
தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் வியர்வை சிந்தி, சென்னை கோயம்பேடில் கட்டிய மண்டபத்தை, தி.மு.க., அரசு இடித்தது. அவரையும் கேவலமாக தி.மு.க.,வினர் விமர்சித்தனர். ஆனால், காலக்கொடுமை இன்று தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது.
மாநில அரசியலுக்கு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தோஷமாக அறிவித்தார். ஆனால், ஐந்து நாட்களுக்குள் என்ன நடந்தது? அரசியலில் எதுவுமே தெரியாத உதயநிதி, துணை முதல்வராக இருக்கிறார்.
ஆனால், 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள திருமாவளவனை, மாநில அரசியலுக்கு வர விடாமல் தி.மு.க., தடுக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன், திருமாவளவனை முதல்வரின் மருமகன் சபரீசன் சந்தித்து, வேண்டுகோள் வைத்து, பின்வாங்க வைத்துள்ளார். மேலும், காங்.,கைச் சேர்ந்தவரை, வி.சி.க., வேட்பாளராக அறிவிக்கவும் தி.மு.க., அழுத்தம் கொடுத்துள்ளது.
இப்படி, கூட்டணி கட்சிக்குள் தி.மு.க., ஊடுருவி, பண பலத்தால் அடிமைகளையும், விசுவாசிகளையும் உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
