‘‘மாநில அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்’’

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், முதலில் மாநிலங்களுக்குள் ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்.பி, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான நவாஸ்கனி, 2026 – 27ம் ஆண்டுக்கான விவசாயம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு துணை மானிய கோரிக்கையின் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், ‘‘நாட்டில் 46% விவசாயிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் 18% மட்டுமே விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது. இந்த புள்ளிவிவரம் இந்த நாட்டின் விவசாயிகளின் நிலையை, அவர்களின் பொருளாதார சூழலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குறைந்தபட்ச ஆதார விலை இல்லை. ஒரு குண்டு ஊசி தயாரிப்பவர் கூட அவருடைய தயாரிப்புக்கான விலையை அவரால் நிர்ணயிக்க முடிகிறது. ஆனால், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியாத வேதனைக்குரிய நிலையே உள்ளது.

என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.39 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நெல்லை சேமிக்க மத்திய அரசு சார்பில், நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நவீன ரக அரசி ஆலை நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Source link