திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சதீஷ் இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா என்பவரைக் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரித்திகாவிற்கு முதல் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் தனக்குப் பெண் குழந்தை வேண்டாம் என்று சதீஷ், பிரித்திகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் அவ்வப்போது சதீஷ் பிரித்தாகவின் வீட்டிற்குச் சென்று தனது ஆண் குழந்தையை தன்னிடம் கொடுக்கும் படி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு சதீஷ் மதுபோதையில் பிரித்திகாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, பிரித்திகாவின் தந்தையான ரவியிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சென்ற சதீஷ், திடீரென நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வந்து பிரித்திகாவின் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த தனது மாமரான ரவியின் மார்பு பகுதியில் சுட்டு விட்டு சதீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் ரத்த காயங்களுடன் ரவி சரிந்த நிலையில் உடனடியாக அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார்.
இது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் காவல்துறையினர் ரவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
