மாமல்லபுரத்தில் கோடை வெயிலுக்கு இதமான புல் குடில்கள்

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து விட்டு, கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்து பொழுதை கழித்து வருவது வழக்கம்.

மேலும் கடற்கரை ஓரங்களில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களில் தங்கியிருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளும் அப்பகுதி கடலில் குளித்து மகிழ்கின்றனர்.

தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில் ஓட்டல்கள், ரிசார்ட்களில் வந்து தங்கும் விருந்தினர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் கோவா, அந்தமான், கொச்சின், கேரளா கோவளம், பகுதிகளில் இருப்பது போன்று “வெயில் புல்” குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

வெயில் நேரத்தில் இயற்கை காற்றுடன் இந்த குடில்களில் அமர்ந்தபடி கடலின் அலைகளை ரசிப்பது, உணவு அருந்துவது, தேநீர் குடிப்பது, புத்தகங்கள் படிப்பது, சதுரங்க விளையாட்டு விளையாடுதல் சுற்றுலா பயணிகளுக்கு புதிய உற்சாகமாக அமையும்.

இதனால் இந்த குடில்கள் உள்ள இடங்களை மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் தேர்வு செய்து வருகிறார்கள். இதற்காக தற்போது ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் வெயில்புல் குடில் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து ரிசார்ட் நிர்வாகிகள் கூறும்போது, தற்போது வெயில் காலம் என்பதால் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அறைகள் பதிவு செய்யும் போதே, ஏசி அறைகள் கேட்பது போன்று, மதியம் மற்றும் மாலை நேரத்தை செலவிட இயற்கை ஓலை குடில்கள் இருக்கிறதா? என கேட்கின்றனர்.

இல்லை என்றால், குடில்கள் இருக்கும் ஓட்டல்களை தேர்வு செய்து அங்கே சென்று விடுகின்றனர். இதையடுத்து கடலூர், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் பகுதிகளில் இருந்து “வெயில்புல்” வரவைத்து, அதை பதப்படுத்தி பின்னர் குடில்கள் அமைக்கும் அனுபவம் உள்ள பணியாட்களை வைத்து, பழையதை புதுப்பித்து வருகிறோம். புதிதாகவும் பல்வேறு மாடல்களில் குடில்கள் அமைக்கிறோம் என்றனர்.

Source link