சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மோதல்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரும், மகனுமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் வெற்றி
இதனால், கட்சியும் இரண்டாக உடைந்தது. பா.ம.க.வின் டாக்டர் ராமதாஸ் தரப்பு, சசிகலாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி தரப்பு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. தேர்தலில் பா.ம.க.வின் அன்புமணி தரப்பு 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், டாக்டர் ராமதாஸ் தரப்பு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டாக்டர் ராமதாஸின் 88-வது பிறந்த நாள்
இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு திண்டிவனம் தைலாபுரம் தோட்டம் சென்று டாக்டர் ராமதாசை, அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் சந்தித்தார். அப்போதே இருவரும் கண்ணீர் மல்க கட்டியணைத்து சேர்ந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடிய டாக்டர் ராமதாஸ், விழாவில் கலந்துகொண்ட மகன் அன்புமணி முன்னிலையிலேயே இனி அரசியலை விட்டு ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். பா.ம.க.வை அன்புமணி வழிநடத்துவார் என்றும் கூறினார்.
அன்புமணி தலைமையில் நாளை பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
இதனால் பா.ம.க.வை வழிநடத்துவதில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூலை 29-ந்தேதி) காலை 11 மணிக்கு மாமல்லபுரம் கான்ப்ளுயன்ஸ் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
