மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய ராமதாஸ் வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க மறுத்த சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன், அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல; மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே, ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு, ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டு, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலும் முடிந்து விட்டது. எனவே, சின்னத்தை முடக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் கமிஷன் தரப்பில், ‘தேர்தல் கமிஷன் ஆவணங்கள் அடிப்படையில், பா.ம.க.,வை அன்புமணி பிரகடனப்படுத்துவதால், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி, அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது ஓட்டுப்பதிவு மட்டுமே மீதம் உள்ளது. உட்கட்சி விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை’ என, தெரிவிக்கப்பட்டது.

ராமதாஸ் தரப்பில், ‘ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படாததால் தான், வழக்கு தொடரப்பட்டு உள்ளது’ என, தெரிவிக்கப் பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி, ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link