மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு : அன்புமணி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஒதுக்கீடு செய்து அன்புமணியின் கட்சி அலுவலக முகவரிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால், விரக்தியடைந்த ராமதாஸ், இந்த கடிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், ‘கடந்த ஆண்டு (2025) மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர் தற்போது பா.ம.க.வில் தலைவராக இல்லை. இருப்பினும், அவர் தலைவராக இருப்பதாகப் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுத் தேர்தல் ஆணைய இந்த முடிவை எடுத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். அதில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று முன்தினம்  (23.03.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்?. சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரண்ட்லி மேட்ச் ஆடுகிறதா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். அதோடு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்

இதனையடுத்து, பா.ம.கவின் மாம்பழம் சின்னத்திற்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பில் நேற்று (24.03.2026) உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, சின்னம் தொடர்பான விவகாரத்தில் மனுவாகத் தாக்கல் செய்தால் நாளைய (அதாவது இன்று) தினத்திற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (25.03.2026) மீண்டும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ராமதாஸ் தரப்பில் மாம்பழ சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் அதனை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அன்புமணி தரப்பில் பதிலளிக்கக் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கில் நாளைக்குள் (26.03.2026) பதிலளிக்க அன்புமணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாளை இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை வழக்கை நாளைய தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

Source link