பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஒதுக்கீடு செய்து அன்புமணியின் கட்சி அலுவலக முகவரிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால், விரக்தியடைந்த ராமதாஸ், இந்த கடிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதே கோரிக்கை தொடர்பான விவகாரம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். அதில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உரிமையியல் விசாரித்ததை தொடர்ந்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு நேற்று (08-04-26) சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அப்போது மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் வழக்கமான பட்டியலின்படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு ராமதாஸ் தரப்பு மீண்டும் முறையிட்டது. அதன்படி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி தமிழ்ச்செல்வி ஒப்புதல் தெரிவித்து விசாரித்தார். அப்போது ராமதாஸ் தரப்பில், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை எனவும் தேர்தலின் போது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் இருதரப்பினரும் பொது சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விசாரணையை நாளைக்கு (10-04-26) ஒத்திவைத்தார்.
