வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
என்னுடைய ஆசிரியைப் பணியில் பலப் பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். பாதித்த ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
உணவு இடைவேளைக்குப் பின் முதல் பாடவேளை. பனிரெண்டாம் வகுப்பு, பெண்களுக்கு மட்டுமேயான பிரிவு. 60 நிமிடங்களுக்கான பாடவேளை.
உணவு இடைவேளையில், ஆசிரியைகளுடைய அறையில், தங்க விலை ஏற்றம் குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. அந்த பாதிப்புடனே வகுப்புக்குள் நுழைந்தேன்.
வகுப்புத் துவங்கும்முன் முதல் நாள் மனதை பாதித்த ஒரு செய்தியைப் பற்றி மாணவிகளிடம் பேசி அவர்களுடைய கருத்துகளைத் தெரிந்துகொண்டு பாடத்தைத் துவங்கும் வழக்கம் எனக்கு உள்ளது.
சாதாரண பின்புலம் கொண்ட மக்களில் சிலர், கைநிறைய தங்கம் கிடைத்தபோதும், விட்டுச் சென்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பக் கொடுக்கும் நிகழ்வுகளை தொலைக் காட்சிகளில் காணமுடிகிறது.
அது போன்ற நிகழ்வு ஒன்றைப் பற்றி சொல்லிவிட்டுப் பாடத்தைத் துவங்க யத்தனித்தபோது முன் இருக்கையில் இருந்த மாயாதேவியின் ஒரு காதில் மட்டும் காதணி இருந்ததையும் மற்றொன்று காலியாக இருந்ததையும் பார்த்துவிட்டு விசாரித்தேன்.
மாயாதேவி ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகள் என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும். வட மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள். வட மாநில மகளிர் நிறத்தையும், நளினத்தையும் கொண்ட அறிவு மிகுந்த பெண்.
மாயா தனது காதணி பள்ளியில் காணாமல் போய்விட்டது, தேடினேன் கிடைக்கவில்லை என்று கூறினாள்.
எங்கள் பள்ளியில் மதிய உணவு பள்ளியால் கொடுக்கப்படும். மாணவிகள் தங்களுக்கான உணவுக்கூடங்களில் ஒன்றாக அமர்ந்து உணவு எடுத்துக்கொள்வார்கள்.
‘எங்கு தேடினாய்?’ என்ற என் கேள்விக்கு ‘வகுப்பறை முழுவதும்’ என்று சொன்னாள். ‘கழிப்பறைக்குக் கூடச் சென்று சோதித்தேன்’ என்றாள். ‘உணவுக்கூடத்திற்குச் சென்று பார்த்தாயா?’ என்று கேட்டபோது ‘இல்லை, சாமிநாதன் சார் அனுமதிக்கவில்லை’ என்று சொன்னாள்.
வராண்டாவில் எட்டிப் பார்த்தேன். சாமிநாதன் நின்றுகொண்டுஇருந்தார். விளையாட்டுத் துறை ஆசிரியர். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறைகளைக் கண்காணிப்பவர். மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே வருவதற்கும் வேறெங்கும் செல்வதற்கும் அவரது அனுமதி தேவை.

சாமிநாதனை அழைத்துக் காரணம் கேட்ட போது, மாயாவை நம்பி வெளியே அனுப்பமுடியாது மேடம் என்றார். உணவுக் கூடத்திற்குச் சென்று வர அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அரை மனதாக ‘உங்கள் வார்த்தைக்காக அனுமதி அளிக்கிறேன்’, என்று கூறி அனுமதி அளித்தார்.
பதினைந்து நிமிடங்களில் மாயா இரண்டு காதுகளிலும் காதணிகளுடன் திரும்பினாள். திருப்தியாக இருந்தது. அவள் சாப்பிட்ட இடத்தில் காதணி இருந்தது என்றும் கூறினாள். ஏதோ சாதனை செய்தது போன்ற நிறைவு எனக்குள்.
மறுநாள் காலை நான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக ப்ரின்ஸிபல் அறைக்குள் நுழைந்தேன். உதவியாளர் ப்ரின்ஸிபல் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார். காரணம் ஏதும் புரியாமல் அறைக்குள் சென்றேன். நான் அறைக்குள் சென்ற போது சாமிநாதன் அமர்ந்து இருந்தார். என்னை ப்ரின்ஸிபல் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மாயாதேவி அறைக்குள் வந்தாள்.
அறைக்குள் கனத்த மௌனம் நிலவியது. எல்லோரும் யாருக்காக காத்திருக்கிறோம் என்று தெரியாமல், எதற்காக என்றும் புரியாமல் இருந்தபோது ஒரு வேன் டிரைவர் உள்ளே வந்தார். பள்ளி மாணவியர் வேன் மூலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு அனுப்பிவைக்கப் படுவார்கள். வந்தவர் பேசப் பேச எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘நேற்று மதியம் முதல் பாடவேளையில் ஒரு கருப்பு கலர் கேரி பையுடன் இந்தப் பெண் வேனில் ஏறியதைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் கீழே இறங்கியதையும் எதேச்சையாகப் பார்த்தேன். சிறிது நேரம் சென்றதும் என்னுடைய வேனுக்குள் சென்று சோதித்தேன். தர்பூசணிப் பழம் பையில்இருந்தது. வேன் சூப்பர்வைசரிடம் கொடுத்தேன்’. இது ஓட்டுநர் தந்த விளக்கம்.

ப்ரின்ஸிபல் ஓட்டுனருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு மாயாவைப் பார்த்தார். தலையைக் குனிந்துகொண்டே ‘சாரி மேடம், இனி இது நடக்காது’ என்று சொன்னதும் அவளையும் அனுப்பிவிட்டார்.
‘சாமிநாதன் என்ன நடந்தது என்று உங்களுக்கு விளக்கமாகக் கூறுவார். பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளை அதிக கவனத்துடன் கையாளுங்கள்’ என்று சொல்லி அழைப்பு மணியை அழுத்தினார். காத்திருந்த பார்வையாளர்களை உதவியாளர் அடுத்து உள்ளே அனுப்பக் காத்துக்கொண்டிருப்பார்.
என்ன நடந்தது என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. வெளியே வந்து சாமிநாதனை என்ன நடந்தது என்று விசாரித்தேன்.
‘மாயா தன்னுடைய காதணியைக் கழற்றி தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே காணாமல் போனதாகச் சொல்லி உங்களையும் என்னையும் ஏமாற்றியிருக்கிறாள் மேடம். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு இரவு உணவுடன் அளிப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த தர்பூசணிப் பழங்கள் மாயா கண்களில் பட்டவுடன் யாரும் இல்லாத நேரத்தில் உணவுக்கூடத்திற்குச் சென்று தர்பூசணிப் பழத்தை எடுத்து, மறைத்து வைக்கத் திட்டம் போட்டிருக்கிறாள்.
செல்ல அனுமதியை உங்கள் வழியாகப் பெற்றிருக்கிறாள். நான் அனுமதி தரமாட்டேன் என்றுகூறினேன், நீங்கள் தான் …….’ என்று உரையாடலை முடிக்காமல் வேகமாகச் சென்றுவிட்டார்.

ஆசிரியைகளுக்கான அறையில் வந்து அமர்ந்தேன். என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ளமுடியவில்லை. காலை மூன்றாவது பாடவேளையில் மாயாதேவியின் வகுப்புக்குச் செல்லவேண்டும்.
நான் நுழைவதற்கு முன் மாயா என்னை நோக்கி வந்தாள். வராண்டாவில் ‘வெரி வெரி சாரி மேடம்’ என்று திரும்பத் திரும்பக் கூறினாள்.
‘என்ன வேலை செய்திருக்கிறாய் மாயா? ஏன்’? என்று நான் கேட்டபோது
‘ஒரு கிக் தான் மேடம். திருடி சாப்பிட்டால் சுவையாக இருக்கும், ஒரு கிக்கும் இருக்கும். நான் மட்டுமா சாப்பிடுவேன், பகிர்ந்து கொடுத்துதான் சாப்பிடுவேன்’ என்றாள்.
வாய் அடைத்து நின்றேன்.
என்ன இளைய தலைமுறை? என் எதிர்பார்ப்பு தவறா? என் கணிப்பு தவறா? தங்கம் விற்கும் விலைக்கு யாரும் கையில் இருப்பதைத் தவறவிடக்கூடாது என்ற என் எண்ணம் தவறா?
நகைக்கடை உரிமையாளரின் மகள் என்ன அறச் சிந்தனையுடன் வளர்கிறாள்? இதில் ஆசிரியர்களின் பங்கு என்ன? ஆசிரியர்கள் சரியான முன்னுதாரணமாக திகழவில்லையா?
மாயாதேவியா? மாயதேவியா? புரியவில்லை.
-விஜயலட்சுமி சங்கரன்

