மார்ச் மாதம் கணிசமாக உயர்ந்தது சீனாவின் பயணியர் கார் ஏற்றுமதி

ஹாங்காங்:எரிசக்தி நெருக்கடியால் மின்சார வாகனங்களுக்கு மாறும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் கார் ஏற்றுமதி கடந்த மாதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் பயணியர் கார் ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 82.40 சதவீதம் உயர்ந்து, 7.48 லட்சம் வாகனங்களை எட்டியுள்ளது. இது முந்தைய மாதமான பிப்ரவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட, 5.86 லட்சம் வாகனங்களை விட உயர்வு.

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்கள் மற்றும் பிளக் இன் கலப்பின வாகனங்கள் உள்ளிட்ட, ‘புதிய எரிசக்தி பயணியர் வாகனங்கள்’ -ஏற்றுமதி, கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 140 சதவீதத்திற்கும் அதிகரித்து, 3.63 லட்சம் வாகனங்களாக உயர்ந்தது. இது, முந்தைய மாதமான பிப்ரவரியில் ஏற்றுமதி செய்யப்பட்ட, 2.76 லட்சம் வாகனங்களில் இருந்து, 31 சதவீதம் அதிகம்.

சீனாவை சேர்ந்த பி.ஒய்.டி., உள்ளிட்ட மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள், சீனாவுக்கு வெளியே உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துவது உட்பட வெளிநாடுகளில் விற்பனையை அதிகரிக்க தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பிராந்தியங்களில் சீன கார் பிராண்டுகள் தங்கள் சந்தை இருப்பை வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகின்றன.

சர்வதேச அளவில் ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும், சீனாவில் உள்நாட்டு விற்பனை மந்தமாகவே உள்ளது. உள்நாட்டு மின் வாகன விற்பனை கடந்த மார்சில், 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. போட்டி மற்றும் அரசு மானியம் குறைப்பு உள்ளிட்டவற்றால், சீன நிறுவனங்கள் தற்போது தங்கள் கவனத்தை வெளிநாட்டு சந்தைகளை நோக்கி திருப்பியுள்ளன.

Source link