VB-GRAM (G) திட்டத்தில், உடல் உழைப்பை மேற்கொள்ளக்கூடிய மாற்றுத்திறனாளிகள் முட்புதர்கள் அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண்மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு மற்றும் கல்வரப்பு அமைத்தல், அகழி தோண்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணித்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைவாக இருந்தால், அவர்களுக்காக வரையறுக்கப்பட்ட சிறப்புப் பணிகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையில் இருந்தால், 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, சாதாரண தொழிலாளர்களின் பணி அளவில் 50 சதவீதம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றும், அந்த மண் தொடர்பான பணிகளை தினமும் 4 மணி நேரம் செய்தாலே போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன் அளவீடு செய்யப்பட்ட 50 சதவீத பணியை நிறைவு செய்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், வேலை கோரும் தகுதியுள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி மின்னணு வருகைப்பதிவேடு (e-Muster Roll) பராமரிக்கப்பட வேண்டும். பணி அளவீடு, இறுதி அளவீடு மற்றும் முழு ஊதியம் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார அளவிலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தையும் ஊராட்சி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
