மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? சீமான் பளீச் பதில்!

சென்னை: மாற்று வேட்பாளராக மனைவியை தவிர கட்சியில் யாரும் இல்லையா? என்ற கேள்விக்கு, ” உயிர் துணை, அதனால் இதிலும் துணை” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

கேள்வி: சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறீர்கள். வாரிசு அரசியலை எதிர்க்கும் சீமான், ஏன் மாற்று வேட்பாளராக மனைவியை முன்னிறுத்துகிறார். கட்சியில் வேறு யாரும் இல்லை என்று விமர்சனம் எழுகிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?

சீமான்: 3 சட்டசபை தேர்தலாக போட்டி போடுகிறேன். இது 3வது சட்டசபை தேர்தல். எனது மனைவியை தான் துணை வேட்பாளராக நிறுத்துகிறேன். அவள் உயிர் துணை, அதனால் இதிலும் துணை. அரசியலில் 117 பெண்களுக்கு இடம் கொடுத்தவன், இன்னொரு பெண்ணுக்கு வாய்ப்பை பறிக்கிறான் என்று நீங்கள் பேசுவது ஏற்புடையதாக இல்லை.

இன்னொருவருக்கு கொடுக்கிற வாய்ப்பு, அப்படி பார்த்தாலும் சீமான் இன்னொரு பெண்ணுக்கு தான் கொடுக்கிறான் என்று பெருமையாக தான் பேச வேண்டும். என் மனைவிக்கு ஆக பெறும் தகுதி இருப்பதாக, என்னை விட தகுதி இருப்பதாக நான் கருதுகிறேன். நான் இப்பொழுது தான் அரசியலுக்கு வந்தேன். அவள் பிறக்கும் போதே அமைச்சர் மகள். அதுவும் ஒரு தமிழ் பேரறிஞர் மகள். என் மனைவி யார் என்று எனக்கு தான் தெரியும்.

அவள் தந்த விடுதலையில் தான், நான் இவ்வளவு சுதந்திரமாக இயங்குகிறேன். என்னை சகித்து கொள்வது சாதாரண பெண்ணால் முடியாது. தூங்க மாட்டேன். நள்ளிரவில் படித்து கொண்டு இருப்பேன். எப்பொழுது வருவேன், எப்பொழுது போவேன் என்று எதுவும் தெரியாது. அவர் எனக்காக நிறைய இழந்து இருக்கிறார், அவருக்கு என் பக்கத்தில் துணையாக நிற்கும் வாய்ப்பை கூட கொடுக்கவில்லை என்றால், நான் மனிதனாகவே இருக்க முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.

Source link