“மின்னணு ஆவணங்களைக் காண்பித்தால் கூட போதும்”

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதே சமயம் அவசர தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பணம் கைப்பற்றப்படுவதாக விமர்சனமும் எழுந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கையேடு என்ற நூலைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் சென்னை ராயப்பேட்டையில் இன்று (25.03.2026) வெளியிட்டார். 

கோப்புப்படம்

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மருத்துவ காரணங்களுக்காக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்லும்பட்சத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு வாயிலாக வழியாக உரிய ஆவணங்களைக் காண்பித்தால் கூட போதும். இது குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source link