மிருணாள் தாக்கூரின் திருமணம்; விருப்பத்தை தெரிவித்த தயாரிப்பாளர்

ஷேனெயில் தியோ இயக்கத்தில் அதிவி சேஷ், மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டகோயிட்’. சுப்ரியா யர்லகடா தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படம் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நாட்களில் ரூ.40 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மற்றும் அல்லு அர்ஜூனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அவர் மிருணாள் தாக்கூர் பற்றி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசியதாவது, “மிருணாள் தாக்கூர், இங்கு(தெலுங்கில்) ஒரு நல்ல பையனை தேடி திருமணம் செய்து கொண்டு இங்கேயே செட்டிலாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதன் மூலமாகத்தான் அவரை நாம் இங்கேயே வைத்துக் கொள்ள முடியும். இதற்கு முன்பும் இதேபோல ஒரு நடிகையை நான் வாழ்த்தியிருக்கிறேன். அந்த நடிகை இப்போது ஒரு தெலுங்கு மருமகளாகிவிட்டார்” என்றார். 

இதை கேட்ட மிருணாள் தாக்கூர் சிரித்து கொண்டே ரசித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அல்லு அரவிந்த குறிப்பிட்ட இன்னொரு நடிகை லாவன்யா திரிபாதி ஆகும். அவர் உத்தர பிரதேசை சேர்ந்த நிலையில் இந்தியில் நடிக்காமல் தெலுங்கில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வந்தார். பின்பு தெலுங்கு நடிகரான வருண் தேஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அல்லு அரவிந்த் இதே போல் ‘அல வைகுந்தபுரமுலோ’ பட சமயத்தில் பூஜா ஹெக்டேவுக்கும் வாழ்த்து கூறி தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் பூஜா ஹெக்டே இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link