சென்னை மேற்காசிய போர் பதற்றத்தால் மிளகு ஏற்றுமதி 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், விளைச்சல் 15 சதவீதம் சரிந்துள்ளதாகவும் கேரளத்தின் கொச்சியில் உள்ள இந்திய மிளகு மற்றும் நறுமண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டதாவது:
கடந்த 2025 அக்டோபரில் மிளகு அறுவடை துவங்கி பிப்., மாதத்தோடு முடிந்து விட்டது. இந்தாண்டு மிளகு அறுவடை 15 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால், அது சந்தையை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் மிளகு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2024 – 25ம் ஆண்டில் 20,830 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால், இந்தாண்டு மேற்காசிய போர், அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட புவி அரசியல் சார்ந்த காரணங்களால், 40 சதவீத மிளகு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மிளகு ஏற்றுமதியில் வியட்நாம், பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்தாலும், மணம், சுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நம் நாட்டின் கறுப்பு மிளகுக்கு வரவேற்பு அதிகம்.
கொச்சியில் உள்ள சந்தைக்கு நேற்று 29,000 கிலோ மிளகு வந்தது. தரம் பிரிக்கப்பட்ட சுத்தமான மிளகு 1 கிலோ 708 ரூபாய்க்கும், தரம் பிரிக்காத மிளகு 688 ரூபாய்க்கும் விற்பனையானது.
இவ்வாறு கூறப்பட்டது.
மேற்காசிய போர், அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட புவி அரசியல் சார்ந்த காரணங்களால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
