தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வேட்புமனு கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினமே பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மனுதாக்கல் செய்ததோடு பரப்புரையையும் தொடங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதி அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் மனுதாக்கல் செய்து பிரச்சாரம் செய்திருந்தார். இந்நிலையில் பெரம்பூர் வேட்புமனு தாக்கலுக்கான கூடுதல் பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்துள்ளார். விஜய்யின் வழக்கறிஞர் தரப்பு மூலம் விஜய் சார்பில் இந்த கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து தகவல்கள் சேர்க்கப்படாமல் இருந்தது. தன் மீது குற்றவழக்குகள் இல்லை என விஜய் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த வழக்கு குறித்த தகவல்கள் கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் இந்த தகவல் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் விடுபட்டு இருந்ததால் மதுரை மாநாடு தொடர்பான வழக்கு, கொளத்தூரில் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாக பதிவான வழக்கு என அனைத்து வழக்குகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளது.
