மீண்டார் குத்துச்சண்டை வீராங்கனை * ரவுண்ட் அப்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொழில் ரீதியிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. பெண்களுக்கான ஜூனியர் ‘பிளை வெயிட்’ பிரிவில் இசிஸ் சியோ 19, ஜோஸ்லின் கேமெரில்லோ 21, மோதினர். போட்டியின் 78 வது வினாடியில் இசிஸ் முகத்தில், ஜோஸ்லினின் குத்துவிட்டார். இதில் நிலைகுலைந்த இசிஸ், மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர், ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு, கோமா நிலையில் இருந்தார். நேற்று தானாக சுவாசிக்கத் துவங்கினார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

காலிறுதியில் சபலென்கா

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில், சீனாவின் குன்வென் ஜெங்கை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் ரிபாகினா, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தலியா கிப்சனை சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.

இக்கட்டான நிலையில் இத்தாலி

ரோம்: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் ஆன அணி இத்தாலி. கடந்த 2018, 2022 ல் தகுதி பெறவில்லை. இம்முறை ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றின் முக்கிய போட்டியில் சுவீடனிம் தோற்க, தற்போது ‘பிளே ஆப்’ சுற்றில் பங்கேற்கிறது. இதன் அரையிறுதியில், நாளை பெர்காமோ (இத்தாலி) நகரில் நடக்கும் மோதலில் இத்தாலி, வடக்கு அயர்லாந்தை சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே ‘உலக’ வாய்ப்பை தக்கவைக்கலாம். இல்லையெனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக கோப்பையில் பங்கேற்காமல் வெளியேறும்.

எக்ஸ்டிராஸ்

* ஆமதாபாத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், 7-6, 6-2 என சக வீரர் பாபர்கரை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் விஷால், 1-6, 6-3, 7-6 என்ற கணக்கில் சக வீரர் மத்வின் காமத்தை வென்றார்.

* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ‘சப்-ஜூனியர்’ லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஸ்ரீநகரில் நடந்த போட்டியில் நாம்தாரி ஸ்போர்ட்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணியை வென்றது.

* அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, மைக்கேல் வீனஸ் (ஆஸி.,) ஜோடி, 6-4, 3-6, 13-15 என நெதர்லாந்தின் அரென்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஸ்மித் ஜோடியிடம் போராடி தோற்றது.

* ‘பிபா’ கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக கென்யா செல்கிறது இந்திய பெண்கள் அணி. இங்கு, ஏப். 11ல் இந்திய அணி, கென்யாவுடன் மோத உள்ளது.

* சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இன்று, கேலோ இந்தியா ‘டிரைபல்’ விளையாட்டு துவங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Source link