டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல், இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், ஜூலையில் துவங்கி ஆகஸ்ட் வரை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது வன்முறையாக மாறி கட்டுக்கடங்காமல் போனதால், பிரதமராக இருந்த அவா மி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு பதவியேற்றது.
நேரடி போட்டி
அவாமி லீக் நிர்வாகிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த இடைக்கால அரசு, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. புதிய அரசை தேர்வு செய்ய பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, சமீபத்தில் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்த தேர்தலில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சிக்கும், ஜமாத்- – இ- – இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான, 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இக்கூட்டணியில், 2024ல் நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பின் தலைவர்கள் உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
வங்கதேச பார்லி.,யின் மொத்த பலம் 350. இதில், 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; இது கட்சிகளின் விகிதாசாரப்படி அளிக்கப்படும்.
இதன்படி, 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 299க்கு நேற்று தேர்தல் நடந்தது. இதற்காக, 42,779 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7:30 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 4:30க்கு முடிந்தது. இதில், 13 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள். இதில், 7 கோடி ஆண் வாக்காளர்கள், 6 கோடி பெண் வாக்காளர்கள் அடங்குவர். காலை முதலே மந்தமான ஓட்டுப்பதிவே நிலவியது.
முன்னிலை
பிற்பகல் 2:00 மணி நிலவரப்படி, மொத்தம், 48 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பொதுத் தேர்தலுடன், ‘ஜூலை சாசனம்’ எனப்படும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த பொது ஓட்டெடுப்பும் நடந்தது. இதற்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என, பதிலளிக்கும் வகையில் தனி ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது.
ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. குல்னா நகரில், வங்கதேச தேசியவாத கட்சி – ஜமாத் – -இ- – இஸ்லாமி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வங்கதேச தேசியவாத கட்சி நிர்வாகி மொஹிபுசமான், 55, உயிரிழந்தார். தேர்தல் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய, 9 லட்சம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை கண்காணித்தனர்.
மாலை 4:30 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததை அடுத்து, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது.
இதன் மூலம் அக்கட்சி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு பின், ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகியோர் இல்லாமல் நடந்த முதல் பொதுத் தேர்தல் இது.
ரத்து செய்யுங்கள்! வங்கதேச பொதுத் தேர்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். பொய் வழக்குகளால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் வல்லுநர்களை விடுவிக்க வேண்டும். போலி தேர்தலை புறக்கணித்த பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கு நன்றி. அனைவரையும் உள்ளடக்கிய நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஷேக் ஹசீனா முன்னாள் பிரதமர், அவாமி லீக்
